Monday, February 16, 2015

அன்பளிப்பும் அதன் சிறப்பும்

அன்பளிப்பும் அதன் சிறப்பும்
2614. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
Volume :3 Book :51
2615. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள்.  மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள்.  அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51
2616. அனஸ்(ரலி) அறிவித்தார்.
தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.
Volume :3 Book :51
2617. அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
Volume :3 Book :51
2618. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாம்விட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தின் ஏற்றிச் சென்றோம்.
Volume :3 Book :51
2619. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களிடம், 'இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்" என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர்(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி), 'இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி) அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
Volume :3 Book :51
2620. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்.
என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51
2621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :51
2622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :51
2623. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51
2624. அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர். '(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சி சொல்வார்?' என்று (ஆளுநர்) மர்வான் கேட்டார். அவர்கள், 'இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காக சாட்சி சொல்வார்கள்)" என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர்(ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார். இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுஹைப் அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மை தான்" என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களின் சாட்சியத்தை வைத்து சுஹைப்(ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.
Volume :3 Book :51
2625. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது" என்று தீர்ப்பளித்தார்கள்.
Volume :3 Book :51
2626. நபி(ஸல்) அவர்கள் 'உம்ரா செல்லும்" என்று கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஜாபிர்(ரலி) அவர்களும் இதே போன்றதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்" என்று அதாவு(ரஹ்) கூறினார்.
Volume :3 Book :51
2627. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்து 'மன்தூப்' என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, '(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இதனைக் கண்டோம்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51
2628. அய்மன்(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை" என்றார்கள்.
Volume :3 Book :51
2629. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :51
2630. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில்  (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
Volume :3 Book :51
2631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா(ரஹ்) கூறினார்:
பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதையடுத்து, அதற்குக் கீழேயுள்ள நல்ல காரியங்களான சலாமுக்கு பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாம் எண்ணிப் பார்த்தோம். ஆனால், பதினைந்து நற்செயல்களைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.
Volume :3 Book :51
2632. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், 'நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்க விடுவோம்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும் அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தம் நிலத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ளட்டும்" என்றார்கள்.
Volume :3 Book :51
2633. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதரிடம் கிராமவாசி ஒருவர் வந்து ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'ஆம்" என்று கூறினார். 'அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். '(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக் கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கறக்கிறாயா?' என்று கேட்க அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அப்படியாயின், கடல்களுக்கு அப்பால் சென்று(கூட) நீ வேலை செய். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்" என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment